முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டலும் அவரது மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டலும் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெயபான் சிங் பாவையாவின் மகள் சமீதா சிங். இவர் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீதா சிங்கிற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயபான் சிங் இரு மாதங்களில் கொலை செய்யப்படுவார் என்றும் அவரது மகள் சமீதா சிங் மீது ஆசிட் வீச்சு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இவ்விவகாரம் குறித்து சமீதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜனக்கஞ்ச் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் சமீதா பணிபுரியும் கல்லூரியில் அவர் உடன் பணியாற்றும் மற்றொருவருக்கு எதிரான போக்கை கைவிடும்படி கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை எனில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இறுதியில் இந்தக் கடிதத்தை சிங் பெற்றதாகவும் சமீபத்தில் தான் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து தொடர்ச்சியான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டலும் அவரது மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் குறித்த செய்தி மத்தியப் பிரதேசத்தின் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.