தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இச்சந்திப்பு அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “டெல்லி பயணம் அடிக்கடி செல்வது தான். அது புதிது ஒன்றும் அல்ல. ஜே.பி.நட்டா, அமித்ஷா. பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேற்று பார்த்தோம். கடந்த 1 மாதத்திற்குள் அமித்ஷாவை 2 முதல் 3 முறை கர்நாடகத் தேர்தலுக்காகவும், வேறு வேறு விஷயங்களுக்காகவும் தொடர்ச்சியாகச் சந்தித்துள்ளேன்.
பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாடு பாஜகவை எப்படி வலிமைப்படுத்துவது, எப்படி மக்களின் அன்பைப் பெறுவது, தமிழ்நாட்டில் பாஜக எப்படி பெரிய கட்சியாக; ஆளுங்கட்சியாக கொண்டு வருவது என்பதே நோக்கம். தமிழக அரசியல் களம் சூடாக உள்ளது. வித்தியாசமாக உள்ளது. அது குறித்த மீட்டிங் தான் டெல்லியில் நடைபெற்றது. இதில் புதிதாக எதுவும் இல்லை.
பாஜகவிற்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த கட்சியின் மீதோ அல்லது தலைவர் மீதோ கோபம் இல்லை. கூட்டணியில் இருக்கும் போதும் கட்சி வளர வேண்டும் என நினைப்பது தவறல்ல. கூட்டணியில் இருக்கும் போது சிராய்ப்புகள், உரசல்கள் சகஜம். நேரம், காலம் வரும் போது யாருக்கு ஆதரவு தரவேண்டும் என்பது குறித்து மக்கள் முடிவு செய்கிறார்கள். கட்சிகளுக்கு இடையே சில கொள்கைகள் ஒத்துப்போவதால் கூட்டணி வைத்துள்ளோம். அதேநேரம் எல்லோரும் ஒரே விதமான கொள்கைகள் கொண்டவர்கள் அல்ல. கூட்டணி கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, நீட், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் நோக்கங்கள் வேறு. அதனால் இதில் கூச்சலோ ஆதங்கமோ எதுவும் இல்லை” எனக் கூறினார்.