நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதே சமயம் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல் வெளியாகி இருந்தது. அதாவது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. அதன்படி காங்கிரசின் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ‘தக் லைப்’ (THUG LIFE) படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (19.02.2024) காலை சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். இப்போதைக்கு இது தான் செய்தி. வெளிநாட்டில் இருந்து செய்தியை கொண்டு வரவில்லை. கட்சியினருடன் பேசிவிட்டு 2 நாட்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.