தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கதிரவனிடம் வேட்பு மனு கொடுக்க அனுமதி பெற்றிருந்தார்.
கணேசமூர்த்திக்கு மதியம் 1 முதல் 1.30 என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் கூட்டணி கட்சியினர் நான்கு பேருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் 1 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து காத்திருந்தார் வேட்பாளர் கணேசமூர்த்தி. ஆனால் நீண்ட நேரமாகியும் வேட்பு மனு தாக்கல் செய்ய கணேசமூர்த்தியை அதிகாரிகள் அழைக்கவில்லை. சுயேட்சையாக மனுச் செய்ய வந்த சிலர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு கொடுத்து வந்தனர். பகல் 1.45 ஆகியும் கணேசமூர்த்தி அழைக்கப்படாததால் ஏன் வேட்பு மனு வாங்க கால தாமதம் செய்கிறீர்கள் என கட்சியினர் அதிகாரிகளை கேட்க முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால் வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அறைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கணேசமூர்த்தியை அறைக்கு அழைத்து வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.