இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''உலகம் முழுவதும் மே தினம் கொண்டாடப்பட இருக்கிறது. 'எட்டு மணி நேரம் வேலை; எட்டு மணி நேரம் ஓய்வு; எட்டு மணி நேரம் உறக்கம்' இது ஒரு சித்தாந்தம். தொழிலாளர்களுடைய இந்த சித்தாந்தத்தை சிதைக்கின்ற வகையில் இந்த சட்டம் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் உயிரை இழந்து தியாகம் செய்து பல ஆண்டுகள் போராடித்தான் உலக மே தினம் கொண்டுவரப்பட்டது. மே தினமே அர்த்தமில்லாத வகையில், விரும்பினால் வேலை செய்யலாம் என்று நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவருக்கு தான் கழகத்தின் கொடியும் இரட்டை இலை சின்னமும் என அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, தேர்தல் ஆணையம் அறிவிப்பதை தான் நாம் எல்லோரும் கடைப்பிடித்து செயல்படுத்துவதுதான் மரபு. அதனடிப்படையில் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் கொடுத்திருக்கிற உத்தரவை கடைப்பிடிப்பது தான் சட்டமன்றத்தில் ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள முடியும். மிகப்பெரிய அளவிலே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவில்; இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் பேசக்கூடிய அளவில்; அவர்களுடைய கவனத்தை எல்லாம் ஈர்க்கும் வகையில், இந்த மாநில மாநாடு எந்த இடத்தில் நடக்கும் என்பதை பொதுச்செயலாளர் சொல்லுவார்'' என்றார்.