மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்தியக் குழுவினர், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளைக் கையாண்ட விதத்தைப் பாராட்டினர். மேலும், புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க.விற்கும் தி.மு.க,விற்கும் ரகசிய உறவு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் தினத்தையொட்டி பாதுகாப்பு வழங்கும்படி நேற்று (14-12-23) கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க அரசு அறிவித்திருந்தது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், இப்போது வெளியிட்டுள்ள அரசாணையில் ரூ. 6,000 நிவாரணத் தொகை பெறுவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் வந்தபோது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு மக்களை ஏமாற்றி உள்ளது.
மழை வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவினர் தமிழக அரசை பாராட்டியதாக செய்திகள் வந்துள்ளது. மத்திய குழுவினர் மக்களை சந்தித்தால்தான் இங்குள்ள உண்மையான நிலைமை அவர்களுக்கு தெரியவரும். ஆனால், மத்திய ஆய்வு குழுவை மக்களை சந்திக்க விடாமல் காவல்துறையை வைத்து தமிழக அரசு தடுத்துள்ளது. மக்களை சந்திக்காமல் வெள்ள மீட்புப் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று மத்திய ஆய்வு குழுவினர் பாராட்டியுள்ளனர். இதன் மூலம், திமுக.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது என்று அம்பலமாகி உள்ளது” என்று தெரிவித்தார்.