மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு காரணமாகவும், வேலையின்மை காரணமாகவும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடிவெடுத்தவர்கள், நடந்தே சென்று வருகின்றனர். அதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில் தண்டவாளப் பாதையில் நடந்து சென்றுள்ளனர்.
ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்துத் தூங்கி உள்ளனர். இன்று அதிகாலையில் சரக்கு ரெயில் வந்துள்ளது. சத்தம் கேட்டு அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அவர்கள் மீது ரெயில் மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
மராட்டியத்தில் ரயில் மோதி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர் நாள் கொண்டாடப்படும் மே மாதத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களும், இழப்புகளும் மிகவும் வேதனையளிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அவுரங்காபாத் ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த வலியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சூழலில் பிற மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு உதவும்படியாக மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, 'விசாகப்பட்னத்தில் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மஜக சார்பில் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் குணம் அடைய பிரார்த்திக்கிறோம்' என கூறியுள்ளார்.