Skip to main content

“இதுவரை எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்?” - காங்கிரஸ் எம்.பி. காட்டம்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

lok sabha issue congress mp gaurav gogoi  versus amit  shah 

 

கடந்த ஆண்டு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரது தொலைபேசிகள் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.

 

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் போதைப்பொருள் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கவுரவ் கோகாய் பேசும் போது, "இந்தியாவுக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க நிலம் மற்றும் கடல் எல்லைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? இந்திய மியான்மர் எல்லையில் ஆயுதக் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் கடத்தலை தடுக்க என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? மேலும், எங்களை மீண்டும் மீண்டும் உளவு பார்க்கிறீர்கள். எங்கள் செல்போன்களிலும் பத்திரிகையாளர்களின் செல்போன்களிலும் பெகாசஸ் மென்பொருள் பொருத்துகிறீர்கள். ஆனால், இதுவரைக்கும் எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

குறுக்கிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தனது செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருள் பொருத்தப்பட்டு இருப்பதாக கவுரவ் கோகாய் குற்றம் சாட்டி இருக்கிறார். அதற்கான ஆதாரத்தை அவர் மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இது பொறுப்புடன் விவாதம் நடத்த வேண்டிய இடம். பொறுப்பற்ற அரசியல் செய்யும் இடம் அல்ல" என்று பேசினார்.

 

அப்போது கவுரவ் கோகாய் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பார்த்து, "உளவு பார்க்க பெகசஸ் மென்பொருளை பயன்படுத்துகிறீர்களா? இல்லையா? என்று நான் கேட்டது தவறா என்று சபாநாயகர் கூற வேண்டும்" என்று கூறினார். இது குறித்து அமித்ஷா மீண்டும் குறுக்கிட்டுப் பேசும் போது, "தனது செல்போனில் பெகாசஸ் மென்பொருள் பொருத்தப்பட்டு இருப்பதாக சொல்கிறார். அதற்கு உண்டான ஆதாரத்தை காட்ட வேண்டும். இது போன்று அவர் பேசக்கூடாது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்துவிட்டது. உங்கள் தலைவரை போலவே நீங்களும் படிப்பதில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

 

அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, " உறுப்பினர்கள் சபையில் பேசும்போது ஆதாரத்துடன் கருத்துகளை முன் வைத்தால் சபையின் கண்ணியம் அதிகரிக்கும்" என்று அறிவுறுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்