உயிருக்குயிராய் பழகி தோள்மேல் கை போட்டுக் கொண்டு நகமும் சதையுமாக இருந்தவர்கள் பகையாளிகளாக உறுமி நிற்பதும். காழ்ப்புணர்ச்சியில் வெட்டுக் குத்து வரை போனது. தேர்தல் பகைமையால் ஊரே பாதிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளையும் வெளிக்கொண்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் தற்போது சராசரி குடும்பத்தில் புகுந்த அரசியல் ஒரே குடும்பத்தின் வீட்டிலிருக்கும் அக்கா, தங்கையையும் ஒரே வார்டில் எதிர் எதிர் அணியில் மோதவிட்டிருக்கிறது. அதோடு அவர் நிறைமாத கர்ப்பிணியும் கூட.
தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டமன்றத்தின் உறுப்பினர் பதவி அ.தி.மு.க.வசம் போய்விட்டது. தனது கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால், தி.மு.க. இம்முறை கடையநல்லூர் நகராட்சியைத் தன்வசமாக்கத் தீவிரக் களத்திலிருக்கிறது. முன்பு அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருந்த பா.ஜ.க. தற்போது தனியாக நிற்கிறது.
கடையநல்லூரின் 1வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. சுயேட்சைகள் என்று 10 பேர் மோதுகின்றனர். பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்ட இந்த வார்டின் பாலீஸ்வரன் பா.ஜ.க.வின் மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக இருப்பவர். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் தனது மனைவியான ரேவதி பாலீஸ்வரனை பா.ஜ.க.வின் வேட்பாளராக்கிவிட்டார்.
இதே குடும்பத்தின் பாலீஸ்வரனின் அண்ணன் ஈஸ்வரன் அடிப்படையிலிருந்தே தி.மு.க.விலிருப்பவர். தன் தம்பி மனைவி பா.ஜ.க. வேட்பாளரானதால், குடும்பத்தார் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிய ரேவதி பாலீஸ்வரனை தன் கணவனின் அண்ணனும் மச்சானுமான ஈஸ்வரனும் வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்திருக்கிறார். உடன் அவரது மனைவியும், ரேவதி பாலீஸ்வரனின் அக்காவுமான மகாலட்சுமியும் ஆசிர்வதித்து அட்சதையைப் போட்டிருக்கிறார்கள்.
குடும்பத்தார்களின் வாழ்த்து ஜோரிலேயே ரேவதி பாலீஸ்வரன் உறவினர்கள் வார்டு புள்ளிகளோடு சென்று வேட்புமனுவும் தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்தே அந்தத் திருப்பம் அரசியல் வழியாக விளையாடியிருக்கிறது. 1வது வார்டின் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கனிமொழி என்பவரால் கட்சியின் நிபந்தனைப்படி, ஐந்து லட்சம் தேர்தல் செலவிற்கானதைக் கட்டமுடியாமல் போனதால், அந்த வார்டில் ஆரோக்கியமான நிலையிலிருந்த பா.ஜ.க. வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரனின் அக்காவும், அவரது மச்சான் ஈஸ்வரனின் மனைவியுமான மகாலட்சுமியை வேட்பாளராக்கியிருக்கிறார் தி.மு.க. மா.செ.செல்லத்துரை.
ஒரே வீட்டிலேயே ஒரே வார்டில் தாமரையில் தங்கை, அக்கா சூரியனில் என்ற அரசியல் மோதலும், சவாலும் எப்படியிருக்கும். உள்ளுக்குள் நெருடல் என்றாலும் அதனை இரண்டு உறவுகளுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இதில் உற்றுக் கவனிக்கப்பட இன்னொரு முக்கியமான காரியம் ஒன்று. இந்தக் குடும்ப எதிர் வேட்பாளர்களில் பா.ஜ.க.வின் ரேவதி பாலீஸ்வரனுக்கு இரண்டு பிள்ளைகளிருந்தாலும் தற்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பமாகியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியான ரேவதி பாலீஸ்வரனுக்கு பிப்.17ம் தேதியன்று பிரசவமாகும் என்று மருத்துவர்கள் நாள் குறித்திருக்கிறார்களாம். பிப்.19ம் தேதி தேர்தலுக்கு முன்பே பிரசவம். நிறைமாத கர்ப்பிணியான உங்களால் பிரச்சாரத்தில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியுமா. பெண் என்பதால். இந்தச் சங்கடமான நெருக்கடிச் சூழலில் உங்களுக்கு அனுதாபம் கை கொடுக்கும் என்று கருதுகிறீர்களா. ஒரே குடும்பத்தின் ஒரே வார்டின் அரசியல் மோதலில் பிளவு ஏற்படாதா? என்று நாம் கேட்டதற்கு, நான் அனுதாபத்தை நம்பியிருப்பவளல்ல. நான் களத்திற்குத் தெம்பாகவும் தைரியமாகவும் செல்வேன். குடும்பம் வேறு அரசியல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ள மாட்டேன். என் கணவர் இந்த வார்டு மக்களுக்குப் பணிகள் செய்தவர் என பட்டாசாய்ப் பதில் வருகிறது ரேவதி பாலீஸ்வரனிடமிருந்து.
இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. தாமரை வேட்பாளரின் கணவரான பாலீஸ்வரன் அ.தி.மு.க.விலிருநு்து பா.ஜ.க. பக்கம் வந்தவர். வார்டில் பிரபலமானவர். இங்கு இலை மல்லுக்கு நின்றாலும் அ.தி.மு.க.வினர் மறைமுகமாக தாமரைக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பேச்சும் ஓடிக்கொண்டிருந்தது.
ரேவதி பாலீஸ்வரனிடம் போட்டியாளரும், சூரியனில் களம் காணும் எதிர்வேட்பாளரான அவரது அக்கா மகாலட்சுமியோ, எனக்குக் குடும்பம் முக்கியமல்ல. என் கட்சியான தி.மு.க. தான் எனக்கு முக்கியம். யாருக்காகவும், எதற்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் போல்டாய்.
தேனீர் கோப்பைக்குள்ளே புயல் என்ற கதையாய் குடும்பக் கூட்டுக்குள்ளே புகுந்திருக்கிறது அரசியல். சீட்டுக்காக நிறைமாத கர்ப்பிணி என்றுகூட பாராமல் களத்தில் மோதவிட்டிருக்கிறது பா.ஜ.க.