ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என ஊர் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணதிராயபுரம் ஊராட்சியில் உள்ளது எம்.ஜி.ஆர் நகர். உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி இந்தப் பகுதி மக்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர். கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான, குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, ஆகியவைகளை தங்கு தடையில்லாமல் செய்யகூடிய, தமிழக அரசின் திட்டங்களை நல்லமுறையில் செயல்படுத்த கூடிய வேட்பாளர்களுக்கே நமது வாக்குகளை ஜனநாயக முறைபடி அளிக்க வேண்டும் எனவும், ஊர் கூட்டத்தில் பேசபட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
வாணதிராயபுரம் ஊராட்சியில், வாணதிராயபுரம், தென்குத்து, தென்குத்து புதுநகர், கல்லுகுழி, வேலுடையான்பட்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. வாணதிராயபுரம் ஊராட்சி ஒன்பது வார்டுகளைக் கொண்டதாவும், மொத்தம் 4936 வாக்குகளை கொண்டாதவும் உள்ளன.
வாணதிராயபுரம் ஊர் கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று நிறைவேற்றப்பட தீர்மானத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை உறுதியாக கடைபிடித்து வரும் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சாமிநாதனிடம் சந்தித்தோம்.
அப்போது அவர், பொதுவாக உள்ளாட்சி பதவிகளிலும் மட்டுமல்ல, எம்எல்ஏ மற்றும் எம்பி போன்ற பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் வாக்காள்கள் கைநீட்டி பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் நிலை உள்ளது. அதனால் மக்கள் அவர்களிடம் தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகளை திட்டங்களை செய்து தரக்கோரி உரிமையாக கேட்க முடியவில்லை.
அண்ணன் தம்பியாக இருந்தாலும் கூட போட்டியிடும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டால் நாம் அவர்களை தட்டிக் கேட்க முடியாது. பணம் வாங்கி கொண்டு தானே ஓட்டு போட்டீங்கன்னு நேருக்கு நேர் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். எனவே தான் எங்கள் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடி அமர்ந்து பேசி யாரும் எந்த வேட்பாளரிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை, வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் முடிவெடுத்து உள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் என்னவென்றால், எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும். அப்படி செய்து கொடுப்பதாக எந்த வேட்பாளர் உறுதி அளிப்பவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராகி உள்ளோம். எங்கள் ஊர் முடிவு எடுத்தது போல், தமிழக மக்களும் இதுபோன்று முடிவெடுத்தால் அரசு திட்டங்கள் முறையாக மக்களுக்குப் போய்ச் சேரும். தமிழகம் தன்னிறைவு பெறும். இதை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஊர்மக்களின் விருப்பம் என்கிறார்.
இந்த ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆறுமுகம், பழனிவேல், வைத்தியநாதன், சர்க்கரையா என நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இந்த நால்வரில் ஆறுமுகம் 2001 முதல் 2006 வரை ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். மற்ற மூவரும் களத்திற்கு புதியவர்கள். நால்வரில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை இந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, சுற்று வட்டார கிராம மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.