Skip to main content

“விஜயகாந்த்தின் வாழ்க்கை ஒரு சரித்திரம்” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

“The life of Vijayakanth is a history” - Premalatha Vijayakanth

 

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

 

அதற்கு அவர், “அரசியல் வேறு; சினிமா வேறு. நடிகர் விஜய் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களை அழைத்து, அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, ஊக்கத்தொகை கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அதனால், அவர் சொல்வதற்கு முன் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

 

இன்றைக்கு 40 ஆண்டுகாலம் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த். இனி விஜயகாந்தைப் போல் ஒருவர் பிறந்து வந்தால்தான் உண்டு. எதையுமே எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை மக்களுக்குச் செய்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான். அதனால், விஜயகாந்தைப் போல் நாமும் வரலாம் என்று நினைத்தால் அதனுடைய விளைவு மிகவும் மோசமாகத்தான் இருக்கும். ஏனென்றால், விஜயகாந்த் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கல்வி உதவி எப்படிச் செய்ய வேண்டும், அன்னதானம் எப்படி வழங்க வேண்டும், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி வழங்க வேண்டும், லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை வரலாறாகப் படைத்தவர்தான் விஜயகாந்த்.  

 

அதனால், விஜயகாந்தைப் பார்த்து அவருடைய வழியில் மக்களுக்கு நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விஜயகாந்தைப் போல் வர முடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இது சாதாரண வரலாறு இல்லை. 40 ஆண்டுகால  விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு சரித்திரம். அதனால், பொறுத்திருந்து பார்ப்போம்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளுடைய விருப்பம். அதனால், ஒரு நல்ல முடிவை எடுத்து தே.மு.தி.க ஒரு சிறப்பான அறிவிப்பைக் கூடிய விரைவில் வெளியிடும். மணிப்பூரில் ஏற்பட்ட விஷயம், ஒட்டுமொத்த பெண் இனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு. மோடி உலக நாடுகளுக்குச் செல்வது எல்லாம் பெருமை இல்லை. நம் நாட்டில்  நடக்கின்ற பிரச்சனையை ஒரு பிரதமராக நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அப்பொழுது மக்களுடைய வரவேற்புக்குரிய ஆட்சியாக இருக்க முடியும்.

 

விவசாயிகளைச் சந்திப்பதில்லை, மணிப்பூரில் இந்த மாதிரி ஒரு கலவரம் நடந்தால் அங்கு மக்களை போய்ச் சந்திப்பதில்லை; இதைவிட்டு அவர் உலக நாடுகளை மட்டும் சுற்றி வருவதை யாரும் இங்கு வரவேற்கவில்லை” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்