அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஏற்பட்ட பிரிவினைகளை அடுத்து இருதரப்பும் ஒவ்வொரு முடிவுகளை புதிது புதிதாக எடுத்து வருகின்றன. அதிமுக கோவை மாவட்டச் செயலாளராக ஓபிஎஸ் தரப்பினரால் கோவை செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், ''அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அதிமுக உறுப்பினராக அங்கீகரிக்க கூடாது என ஓபிஎஸ் கடிதம் அனுப்பி இருந்தார். ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட கடிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராளுமன்ற சபாநாயகர் ரவீந்திரநாத்தை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார் என்று நேற்று அறிவித்திருக்கிறார்.
அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளராக ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை வழிநடத்துகிற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை இது உறுதிப்படுத்தி இருக்கிறது. பாராளுமன்ற சபாநாயகருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கைக்கூலிகளுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு கட்சியை அழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட காரணத்தால், அவரோடு சேர்ந்து செயல்படுபவர்களை அடையாளம் கண்டு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வருகிறோம். அந்தப் புதிய இடங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும், தலைமை கழக நிர்வாகிகள் உட்பட அத்தனை பேரையும் நியமித்து வருகிறோம்'' என்றார்.