அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் தலையெடுத்து அதன் காரணமாக அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கட்சிக்கு முரணாக செயல்பட்டதாக பல்வேறு நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேரலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேரலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலந்தொட்டே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட மூன்று பேருக்கு மட்டும் பொருந்தாது'' என்றார்.