அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். காலையிலேயே எம்.ஜி.ஆரின் சமாதி பூக்களால் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழியேற்றனர். அதில், “‘அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒருமுறை அனுபவப்பட்டவர்கள் வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத் துணியார். இதனை முளையிலேயே நசுக்கி ஒழிக்க வேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கை கொண்டவர்களின் நீங்கா கடமையாகும்’ என அண்ணா கூறினார். தொண்டர் இயக்கமான அதிமுகவை தன்வசமாக ஆக்க நினைக்கும் துரோகியை வீழ்த்திட உறுதியேற்கிறோம்” எனக் கூறப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.