அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணியை எனவும், ஓபிஎஸ் அணி எனவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், ''நாளை சட்டப்பேரவை கூட்டம் தொடங்க இருக்கிறது. தமிழக மக்களுடைய அன்றாட நிகழ்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள், அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒரு எதிர்க்கட்சி என்ன முறையில் சட்டமன்றத்தில் அரசனுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அதை செய்வோம். சட்டமன்றத்தை பொறுத்தவரையில் சட்டப்பேரவை தலைவரின் முடிவுதான் இறுதியானது. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த நோக்கத்துடன், ஜெயலலிதா இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருமாற்றிக் காட்டினாரோ அதற்கு வலு சேர்க்கின்ற வகையில் தான் எங்களுடைய நடவடிக்கைகள் இருக்கும்.
இந்த இயக்கத்தை 50 ஆண்டுகள் தாங்கி பிடித்த தொண்டர்களுக்கான அடிப்படை உரிமைகள் எந்த நேரத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கினார். அதை எந்த நிலையிலும் பறிபோக விடாமல் தடுப்பது தான் எங்களுடைய நோக்கம். ஒரு சாதாரண தொண்டன்கூட கழகத்தின் உச்சபட்ச பதவியில் போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது. 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், போட்டியிடும் தலைமை கழக நிர்வாகிகள் ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எந்த நேரத்திலும் விதியை கொண்டு வரவில்லை. ஜெயலலிதாவும் அப்படி ஒரு விதியை கொண்டு வரவில்லை. இப்பொழுது வருகின்றவர்கள் தேவையில்லாத பிரச்சனை செய்கிறார்கள். அதிமுக சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்று உரிமைக் குரல் கொடுத்து தான் இந்த தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.