சென்னையில் ரூ. 1000 கோடிக்கு மேல் மதிப்புடைய அரசு நிலம் அதிமுக ஆதரவுடன் ஆக்கிரமிப்பில் இருந்ததாகவும் அதனை சட்டப்படி போராடி தமிழ்நாடு அரசு மீட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “சென்னையில் தோட்டக்கலை சங்கம் என சொல்லக்கூடிய அரசாங்கத்து நிலத்தை ஒரு தனி நபர், குறிப்பாக அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சங்கம் என்ற பெயரில் பல்லாண்டு காலமாக அனுபவித்து வந்தார். இந்த இடம் 1910ல் அரசாங்கத்தில் இருந்து தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கைமாறி தனி நபர்களின் கைக்கு இந்த சங்கம் போய்விட்டது.
இந்த ஆக்கிரமிப்பை கண்டுகொண்ட கலைஞர் 1989 ஆம் ஆண்டு இந்த இடத்தை மீட்க உத்தரவிட்டார்கள். அதில் ஒரு பகுதி மட்டுமே மீட்க முடிந்தது. அது இப்போது செம்மொழி பூங்காவாக உள்ளது. அதற்கு எதிரே உள்ள இடத்தை மீட்க அரசு முயற்சி எடுத்த நிலையில் அரசாங்கம் மாறிவிட்டது. அந்த 11 ஆண்டு காலமும் சட்டப் போராட்டத்தை அதிமுக நடத்தவில்லை. நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்தது. 2011 ஆம் ஆண்டு தோட்டக்கலைக்கென்று வழங்கிய நிலத்தை கிருஷ்ணமூர்த்திக்கென்று பட்டாவும் வழங்கியுள்ளார்கள்.
ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் கலைஞர் ஆரம்பித்த சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கடந்த 6 மாதத்திற்குள்ளாக உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களுக்கெல்லாம் சென்று நேற்று இந்த இடத்தை மீட்டுள்ளோம். தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய். தனி நபர் ஆக்கிரமிப்பில் இருப்பதற்கு போன ஆட்சி உதவியாக இருந்துள்ளது. தற்போது அது மீட்கப்பட்டுள்ளது” என்றார்.