!["DMK says one thing and does another." - L. Murugan](http://image.nakkheeran.in/cdn/farfuture/lNIY2Eid-uB_3eK-LoerqAnexXSur0KPo1eAOK24OX4/1636106257/sites/default/files/inline-images/th-1_2134.jpg)
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “83 வருட பாரம்பரியமிக்க அகில இந்திய வானொலி நிலையத்தின் செயற்பாடுகள் விவசாயம், அரசியல், தேசியம், வெளிநாடு சம்பந்தமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. பாரம்பரியமிக்க இந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்காக மிகப்பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் முன்னேறும் வகையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் சிறப்பு பொருளாதார பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. கடல்பாசி மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடல் பாசியை அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இலட்சத்தீவு சென்று அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்த திட்டத்தால் பொருளாதாரம் அதிகம் வளரும். இந்தியாவில் கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை, மேற்கு வங்கம், பரதீப் ஆகிய ஐந்து இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கிவருகிறோம். மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளுக்கான கூடுதல் வரியை (Road cess) நீக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழ்நாடு மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததையெல்லாம் கூறினார்கள். பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் அது வழங்கப்படவில்லை. திமுக சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது” என்றார்.