கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், “உத்தரபிரதேசத்தில் பெண் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை உத்தரபிரதேச அரசு விபத்து என்கிறது. மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திருத்தம் வரலாற்றில் மோசமான சட்டம். நாடு முழுவதும் சட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். முதன் முதலில் ஆதார விலையை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசுதான். கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் கோதுமைக்கு நிகராக அரிசி விலை நிர்ணயம் செய்தது பா.சிதம்பரம் தான்.
காங்கிரஸ் அரசு சிறு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறது . பா.ஜ.க. அரசு பெரு விவசாயிகளுக்கும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. பொதுத் துறையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான் பா.ஜ.க அரசின் முதல் திட்டம். இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் பேரை வேலையைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்தியாவில் ஜியோ நிறுவனம் மட்டும்தான் இருக்கும்.
பா.ஜ.க.வின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக ராகுல் காந்தி களப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 144 தடை உத்தரவு மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. மக்கள் பிரச்சனைகளை பார்க்கவோ, தீர்ப்பதற்கும் செல்லலாம் என்று சட்டத்திலே உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி செலவு மற்றும் நூறு சதவீத லாபம் இது தான் எங்களது கோரிக்கை. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்ததால் கடந்த 10 ஆண்டுகளில் 15 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து மேலே வந்துள்ளனர். ஐ.நா.வே பாராட்டியுள்ளது.
அ.தி.மு.க அரசு மிகப்பெரும் தவறு செய்துள்ளது. அதனை வாசன் வரவேற்றுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. தான் ஒரு விவசாயி எனக்கூறும் எடப்பாடி, எட்டப்பன் போல் தவறு செய்துள்ளார்.” என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, இளைஞரணி பொதுச்செயலாளர் கமல் மணிரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.