கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தால் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதில் ஒரு பெண்ணின் வீடியோ கதறல் "அண்ணா பெல்டால அடிக்காதீங்க" என்ற குரல் ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது.இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கு ஆளும் தரப்பு மீது கடும் கோபம் ஏற்பட்டது.இதன் விளைவாக கொங்கு மண்டலத்தில் தனி செல்வாக்குடன் இருந்த அதிமுக, தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு முன்பு தொடர்ந்து அதிமுக கோட்டையாக இருந்த பொள்ளாச்சி இப்போது திமுக கைப்பற்றியது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பொள்ளாச்சியில் எப்போதும் அதிமுக தான் வெற்றியடையும் ஆனால் இந்த முறை திமுக வெற்றி பெற்றதற்கு பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான வன்கொடுமையை காரணம் என்றனர்.மேலும் இந்த சம்பவத்தால் இப்பகுதி மக்கள் வெளியூர் சென்றால் கூட அங்குள்ளவர்களிடம் பொள்ளாச்சி என்று சொல்ல வெட்கப்படும் அளவுக்கு இந்த சம்பவம் எங்களை பெரிதும் பாதித்துவிட்டது என்றனர்.
மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி சம்பவத்துக்கு நடிகர் கமல் குரல் கொடுத்ததன் விளைவாக மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட மகேந்திரனும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்படத்தக்கது.