தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் போட்டியிடும் 12வது பொதுத்தேர்தல் இது. 1971ஆம் ஆண்டு முதல்முறையாக காட்பாடி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். பின்னர் ராணிப்பேட்டை தொகுதிக்கு மாறி அங்கும் இரண்டு முறை வெற்றிபெற்றார். இதுவரை 11 முறை தேர்தலில் போட்டியிட்டு 9 முறை வெற்றிபெற்றவர். அதில் 7 முறை காட்பாடி தொகுதியில் இருந்தே வெற்றி பெற்றார். இதே தொகுதியில் 1984, 1996 என 2 முறை தோல்வியைச் சந்தித்தார். 10வது முறையாக காட்பாடியில் களமிறங்கியுள்ளார்.
காட்பாடி தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் துரைமுருகன் பெயர் சொல்லும் அளவுக்கு அரசின் திட்டங்களை, அரசு அலுவலகங்களைக் கொண்டுவந்து சேர்த்தது அவருக்குப் பெரும் பலமென்றால், வெற்றி பெற்றபின் பெரும்பாலும் தொகுதி மக்களை சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. முதல் முறையாக தேர்தலில் நிற்பது போல இப்போதும் காலை, மாலை, இரவு எனத் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு கேட்கத் தொடங்கியுள்ளார். குக்கிராமத்திலும் வாக்காளர் சிலரை பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிக்கும் அளவுக்கு இருப்பது அவரது பலம். இந்த முறை வாக்குறுதிகளாக, சேர்க்காடு பகுதியில் 15 ஆயிரம் கோடியில் 17 அடுக்கு கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல், லாலாபேட்டையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் எனத் தொகுதி மக்களுக்கு வாக்குறுதி தந்துவருகிறார். அதேபோல் அந்தந்த கிராம மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சமுதாயக் கூடம் கட்டி தருகிறேன், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுவது, விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவது என்று கூறியுள்ளார். பொன்னையாற்றின் குறுக்கே திருவலம் அருகே மேம்பாலம் கட்ட சட்டமன்றத்தில் பேசி ஒப்புதல் வாங்கினேன், பணமில்லைன்னு சொல்லி நிறுத்திட்டாங்க. திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பாலம் வந்துவிடும் எனச் சின்னச் சின்ன ஊர் பிரச்சனைகளை ஆட்சிக்கு வந்ததும் செய்து தந்துவிடுகிறேன் என வாக்குறுதி தந்துவருகிறார். கட்சிக்காக தான் எதுவும் செலவு செய்யறதில்லை, தேர்தலின்போது, அவரது வெற்றிக்காகவாவது செலவு செய்தால் என்ன, அதுக்கும் கட்சிக்காரன் பாக்கெட்டையே எதிர்பார்த்தா என்ன அர்த்தம் எனக் கேட்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் சிலர். இது அவரின் கவனத்துக்குச் சென்றபோது, கடைசி நேரத்தில் கவனிக்கலாம்யா எனப் பதிலளித்துள்ளாராம். அவரின் இயல்பை அறிந்த சில நிர்வாகிகள் மட்டும் பொதுச்செயலாளர் என்பதால் செலவு செய்கிறார்கள்.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னால் மா.செ. ராமு, அமைச்சர் வீரமணியின் சிஷ்யர், பினாமி. நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த ராமு, குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்தவர். மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மனாக இருந்தவரை, தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை வன்னியர்கள் அதிமுகமுள்ள தொகுதியில், அதுவும் திமுகவின் பெருந்தலையை எதிர்த்து நிறுத்தியது அதிமுகவினரை அதிருப்தியடையச் செய்துள்ளது. இது அமைச்சர் வீரமணியின் திட்டம், துரைமுருகனை ஜெயிக்கவைக்க இப்படிச் செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்கு சேகரிப்பில் உள்ள வேட்பாளர் ராமுவோ, வன்னியர் சமுதாய மக்கள் அதிமுகவுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர் சீனியர் அரசியல்வாதி, தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் தான், ஆனால் இந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீண்ட வருடமாக காட்பாடியில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர், அதைச் செய்யவில்லை. நான் வெற்றி பெற்றால் அதனை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி தந்து வலம் வருகிறார்.
அமமுக சார்பில் ராஜா நிற்கிறார். அமமுகவுக்கு இங்கு பெரிய அளவில் பலமில்லாததால் சுரத்தேயில்லாமல் சுற்றி வருகின்றனர். கடந்த தேர்தல்வரை துரைமுருகன் மீது தேமுதிக தலைமைக்கு இருந்த கோபம் இந்த தேர்தலில் இல்லாமல் போனதால் தேமுதிகவினர் சுணக்கமாக உள்ளனர்.
காமராஜர், ராஜாஜி, ஜெயலலிதா என முதல்வர்களை எதிர்த்து நின்று சாதாரண வேட்பாளர்கள்தான் தோற்கடித்தார்கள் என்பதை அறிந்தவர் என்பதால், தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் பலமான வேட்பாளர் இல்லையென்றாலும் களத்தில் வெற்றிக்கான வியூகம் வகுத்துக்கொண்டே இருக்கிறார் துரைமுருகன். துரைமுருகனை தோற்கடித்தால் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிடுவோம் எனக் களத்தில் தீவிரம் காட்டுகிறார் அதிமுக வேட்பாளர் ராமு.