Skip to main content

மாவட்ட ஆட்சியரை கண்டித்து பாஜக தீர்மானம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Karur bjp district executive meeting

 

கரூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (29.01.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் இடையே மாவட்ட தலைவர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தின் நிறைவில் கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்று, பாராட்டு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

 

இதே போல் சட்டசபையில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவீன கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ளி உள்ளூர் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். லாரிகளில் மணல் கடத்தல் நடப்பதை தடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் போராட்டங்களுக்கு முறையான அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகப்படியான மது விற்பனை செய்து அதிகப்படியாக வருவாய் ஈட்டி கொடுத்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியரை கண்டித்தும், மாவட்டம் முழுவதும் பரவலாக போதைப்பொருள் அதிக அளவில் விற்கப்படுவதை தடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

மாவட்ட செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதில் மத்திய பட்ஜெட் தொடர்பான விளக்க உரையை மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்க வேண்டும் என செந்தில்நாதன் கேட்டுக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்