நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதனிடையே, நாளை (16-03-24) மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் பா.ஜ.க இடையே மூன்று முறை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ் தரப்புக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் தாமரை சின்னத்தில் தான் ஓ.பி.எஸ் தரப்பு போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து இதற்காக எவ்வளவு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், ஒரே முடிவாக தேர்தலை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
பரவி வரும் தகவல்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது போன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை அதிமுக தொண்டர்களும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மக்களவைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இந்த சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சியில் விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். நிலையான ஆட்சி மற்றும் நல்லாட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்களை நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.