இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏக்களுக்கு பிரசுரங்கள் வழங்குவதன் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கான கூட்டத்தொடர் இன்று(09.03.2020) துவங்கி ஏப்ரல் 9-ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 10.00 மணிக்கு துவங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக பேரவைக்கு வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ க்கள் மற்றும் பேரவை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் கரோனா பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்களும், கைகளை சுத்தப்படுத்துவதற்காக கிருமி நாசினியும் கொடுக்கப்பட்டது.