Skip to main content

“தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? மன்னிப்பு கேட்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Karnataka sivamoga constitution tamil song issue ramadoss condemn

 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமாக தேர்தல் பணிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில், பல தலைமுறைகளாக லட்சக்கணக்கில் தமிழர்கள் வாழ்ந்து வரும் சிவமோகா தொகுதியில் பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தச் சொல்லிவிட்டு கர்நாடகா மாநில கீதத்தை இசைக்கச் செய்தார். 

 

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருந்த மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்டு இழிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

Karnataka sivamoga constitution tamil song issue ramadoss condemn

 

அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, அதை அம்மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தச் செய்ததுடன், அதற்கு மாற்றாக கன்னடமொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார். அவரது அப்பட்டமான மொழிவெறி கண்டிக்கத்தக்கது.

 

கர்நாடகத்தில் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் தான் அந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்யப்படுவது தான் முறையாகும். கன்னடமொழிவெறியராக அறியப்பட்ட ஈஸ்வரப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவரது கடமை. ஆனால், மேடை நாகரீகம் கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளார்.

 

மாநாட்டில் பங்கேற்றவர்களில் எவருக்கும் கன்னடமொழி வாழ்த்து தெரியவில்லை. அதை அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் மீது கன்னடமொழி வாழ்த்து திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை தாழ்த்தியும், கன்னடமொழியை உயர்த்தியும் ஈஸ்வரப்பாவும் பிற அமைப்பாளர்களும் நடந்து கொண்டது பெரும் தவறு. அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய மொழிவெறிச்செயலை அந்த மேடையில் இருந்த தமிழர்கள் எவரும் தட்டிக் கேட்காதது வருத்தம் அளிக்கிறது.

 

கன்னடமொழிக்கும் தாய் தமிழ்மொழி தான். கன்னடத்திற்காக தமிழை இழிவுபடுத்துவது தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது ஆகும். மொழிவெறி சிந்திக்கும் திறனை செயலிழக்கச் செய்துவிடும் என்பதற்கு தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் நடந்துகொண்ட விதம் தான் எடுத்துக்காட்டு ஆகும்.

 

மொழிகள் தாயினும் மேலானவை. அதனால் தான்  "உன் தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு, தமிழை பழித்தவனை உன் தாய் தடுத்தாலும் விடாதே” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொங்கினார். “அனைவருக்கும் அவரவர் தாய்மொழி உயர்ந்தது. உங்கள் மொழி மீது பற்றும் மரியாதையும் காட்டுங்கள்... பிறமொழிகளை இழிவுபடுத்தாதீர்கள். அது வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்பதை ஈஸ்வரப்பா போன்ற கன்னடமொழி வெறியர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்