கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதியும் வழங்கியுள்ளது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதுபற்றி சபாநாயகரிடம் திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்ற தீர்ப்பில், 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று குறிப்பிட்டு தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகிய அமர்வு விசாரித்து வந்தது.
இதற்கிடையே மேற்கண்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால் அடுத்த விசாரணை தேதி எதுவும் குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்விற்கு பின்னர் 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்கின்றனர். தற்போது கர்நாடக வழக்கில் தீர்ப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வந்துள்ளதால் தமிழகத்திலும் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர். கர்நாடக தீர்ப்பு எதிரொலியால் தமிழக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.