பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு விஷமத்தனமானது: கண்டிக்கத்தக்கது.
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் ஏமாற்றி வரும் கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தது. ஆனால், இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்திருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனடிப்படையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டத்தில் கர்நாடக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும், தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடகத்தின் இந்த வாதம் தவறானது ஆகும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசும் இதை பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளது. முந்தைய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 09.06.2015 அன்று எனக்கு எழுதியக் கடிதத்தில்,‘‘மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த நிலைப்பாடு மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதற்கும் பொருந்தும். 2008-09 காலத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக ஓகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முயன்ற போது, கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெறாமல் அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி எடியூரப்பா பல போராட்டங்களை நடத்தினார்.
தமிழகத்தின் தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதற்கே கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அப்போது வலியுறுத்திய எடியூரப்பா, இப்போது தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்காக அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறுவது விசித்திரம் ஆகும். கர்நாடகத்தின் இந்த கருத்து இரு மாநில உறவுகளுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும். கர்நாடகத்தின் வாதத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது.
அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் என்று கர்நாடகம் கூறியிருப்பது மிகவும் அபத்தமானது ஆகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே இப்போது 104.59 டி.எம்.சி கொள்ளளவுள்ள 4 அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு கர்நாடகம் மனமுவந்து தண்ணீர் திறந்து விடுவதில்லை. மாறாக 4 அணைகளும் நிரம்பிய பிறகு வடியும் வெள்ள நீர் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சுமார் 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாட்டிற்கு சொட்டு தண்ணீர் கூட திறக்கப்படாது.
எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது. இது தொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.