திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த வருட பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக மருத்துவர் அணி சார்பில் மாரத்தான் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னதாக பூங்கோதை ஆலடி அருணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திமுக மருத்துவர் அணி சார்பில் வரும் 1- ஆம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அந்த மாதம் முழுவதும் மண்டலம் வாரியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த மராத்தான் போட்டி நடைபெறுவதன் நோக்கம் தொற்றா நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆகும். மாரடைப்பு, மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட 6 வகையான நோய்கள் தொற்றா நோய்களாக உள்ளன. கொரோனா வைரஸ் நோய், டெங்குவை விட வேகமாக பரவக்கூடியது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் இருமல் தொண்டை வலி அதிகமாக இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்றார்.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கூறும்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தெற்கு திமுக சார்பில் இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் இன்னும் வரவில்லை. திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதில் 25000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மரத்தான் போட்டி எந்த தேதியில் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.