கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று கடந்த மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்கிற நிலையில் 135 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான கபில் சிபல் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவு வெளியான அன்று (13.05.2023) அவரது ட்விட்டரில், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீதம் கமிஷன் விவகாரம், கேரள ஸ்டோரி திரைப்படம் தொடர்பான பிரச்சனைகள், பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய் ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானது தான்" என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (14.05.2023) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதனை விட மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள். இதில் எதுவும் இல்லாததால் தான் பாஜக தோற்றது" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (15.05.2023) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேர்தல் முடிவில் இருந்து தெரிய வருவது, ஒரே பொருளை விற்பது, ஒரே பொய்யை திரும்பச் சொல்வது, விஷமத்தனமான பேச்சு, கடந்த காலத்தை கொச்சைப்படுத்துவது, ஊழல் அரசுடன் இணைந்து மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று அழைப்பது, வகுப்புவாத அரசியல் விளையாட்டு ஆகியவற்றை எல்லா நேரமும் செய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.