காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, கடந்த சில தினங்கள் முன் இந்த நடைபயணத்தில் 100 ஆவது நாளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், 100 நாட்களைக் கடந்து 107 ஆவது நாளை எட்டிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இன்று திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். 107 ஆவது நாளின் நடைபயணத்தை அரியனா மாநிலம் சோனா அருகே தௌஜ் என்கிற இடத்தில் இன்று ராகுல் காந்தி தொடங்கினார்.
திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்து கொண்டார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று இரவு பரிதாபாத்தை அடைகிறது. நாளை டெல்லி செல்லும் ராகுல்காந்தி ஜனவரி 26 ஆம் தேதி தனது இந்திய ஒற்றுமைப் பயணத்தை நிறைவு செய்கிறார்.