சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் உட்பட 40 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.ம தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என ஆலோசனை நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் முன்னதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இன்று அவர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் ம.நீ.ம குறித்த தரவுகளைச் சேகரித்து அறிக்கையாகச் சமர்ப்பிகின்றனர். அதன் அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
மேலும், ரஜினியின் அரசியல் வரவையொட்டி தமிழக அரசியல் நிலவரம் மற்றும் இரு திராவிட அரசியல் கட்சிகள் இல்லாமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறவிருப்பதாக தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாருக்கும் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பத்திரிகையாளர்களுக்கும் அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து வெளிவரும் நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தி அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.