தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே. 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (04.04.2021) மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்களும் முடிவுக்கு வருகின்றன. அதனால், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசன், தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உக்கடம், தெப்பக்குளம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், “4 வருடங்களுக்குள் கோவை தெற்கு தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு முன் உதாரணமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது உறுதிமொழியில்லை, என்னுடைய இலக்கு. இதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.. தலை சாயமாட்டேன்’ என்றார். இந்தப் பிரச்சாரத்தின்போது, கமல்ஹாசனுடன் சமக தலைவர் சரத்குமாரும் பிரச்சாரம் மேற்கொண்டார்.