'உடல்நிலை கருதி அரசியலுக்கு வரமாட்டேன்' என்று ரஜினி சொன்னதை வரவேற்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் ஒன்றியத்தில் நான்கு மினி கிளினிக்கை இன்று (29.12.2020) திறந்துவைத்தார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்தார். அதில், 1,400 கிராமப் பகுதிகளுக்கும், 200 சென்னையிலும் 400 நகர்ப்புறங்களில் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மினி கிளினிக் திறந்துவைத்து வருகிறோம்.
இந்த மினி கிளினிக் மருத்துவத்திற்காக தொலைதூரம் செல்ல முடியாத மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 'பாலகிருஷ்ணா' மேம்பாலத்திற்காக எடுக்கப்பட்ட இடங்களில், ஒரு சிலருக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுடன் அதிகாரிகள் பேசி, பணம் கொடுக்க இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பாலம் கட்டுமானப் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இருக்கிறோம். அதுபோல் ஒவ்வொருவருக்கும் உடல்நிலை முக்கியம். ரஜினி, தன் உடல்நிலை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதை நான் வரவேற்கிறேன்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன், எடப்பாடி பழனிசாமியைப் பார்த்திருக்கிறார். அதன்பின் கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை' எனத் தெளிவாகவே கூறிவிட்டார். இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இருக்கிறது. இப்படி வழக்கம்போல் கூட்டணி இருப்பதால் வரக்கூடிய தேர்தலில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். அதில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார்” என்று கூறினார்.