தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். அதிமுக அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் திமுக அதை அறிவித்துவிட்டது என்றார்.
இந்நிலையில் திமுக எங்கள் திட்டங்களைக் காப்பி அடிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாகவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிராமசபைக் கூட்டம் தொடர்பான அறிவிப்புகளைத் தமிழகத்தில் ம.நீ.ம முன்னெடுத்த நிலையில், திமுக அதை இந்தத் தேர்தலில் கையிலெடுத்துள்ளது என திமுகவிற்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இடையே வார்த்தை மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (08.03.2021) நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசுகையில், ''தற்சார்பு கிராமங்கள் என்று நாங்கள் சொன்னதும், அவர்கள் 'ப்ரோட் பாண்ட்' என்று அறிவிக்கிறார்கள். 7 உறுதிமொழிகள் உட்பட அத்தனையும் காப்பி அடிக்கிறார்கள். அப்படியாவது பாஸ் பண்ண வேண்டும் என்ற அவசரம் வந்துவிட்டது. இப்போ என்னவென்றால் நாங்க எழுதிவைத்திருக்கும் சீட்டு கிழிச்சு கிழிச்சு அங்கே போய்க்கொண்டிருக்கிறது துண்டு சீட்டாக'' என்றார்.
இதற்கு முன்பே, ‘சமூகநீதி பேசும் திமுகவில் திருமாவளவனுக்கு குறைந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. என் தம்பி திருமாவளவன் இனி இங்குதான் வரவேண்டி இருக்கும்’ என கமல்ஹாசன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.