பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் ஊர்மக்கள் அங்கு வந்து அவர்களைப் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல் கனலை அரிவாளால் வெட்ட வரும்போது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கனலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனை அறிந்த ஊர் மக்கள் அங்கு வரும்போது அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக கனல், மனோஜ் ஆகிய இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருவின் தங்கை செந்தாமரை, இதற்குக் காரணம் பா.ம.க.தான். நாங்கள் ஏற்கனவே இதனைப் பேட்டியில் சொல்லியுள்ளோம். போலீசில் தகுந்த பாதுகாப்பும் கேட்டோம். ஆனால் கொடுக்காததால்தான் இந்தப் பிரச்சனை வந்துள்ளது என்றார்.