அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார்கள் என கி. வீரமணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தார். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற அவரது தத்துவத்தை சொன்னார். இதுதான் சமூகநீதி அதை எங்கெங்கோ படிக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
பெண்கள் கல்லூரிக்கு போகவேண்டும் என்று சொன்னால் ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்தில் உள்ளது. கல்லூரியில் பெண்கள் எத்தனை ஆண்டுகள் படித்தாலும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய். ஒரு வீட்டில் 4 பெண் பிள்ளைகள் இருந்து அனைவரும் கல்லூரியில் படித்தால் நால்வருக்கும் 1000 ரூபாய் கொடுக்கிறார்கள்.
அதிமுக குறித்து செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அதிமுகவும் திராவிடர் கழகம் தான். அதனால் தான் எங்களுக்கு கவலை உள்ளது. எம்ஜிஆர் அண்ணாவின் பெயரில் ஆரம்பித்து அண்ணா திமுக என வைத்தார். இப்போது அண்ணாவை எடுத்துவிட்டு அடமான திமுக என ஆக்கி விட்டார்கள். டெல்லியில் போய் அடமானம் வைத்துவிட்டார்கள். எவ்வளவு சீக்கிரம் மீட்கிறார்களோ அதுதான் அவர்களுக்கும் நல்லது. நமக்கும் நல்லது” என்றார்.