
இந்தியா முழுக்க பெரும்பான்மையான பகுதியில் பல்வேறு வழிகளிலும் யுத்திகளிலும் பாஜக தனது கட்சியை வளர்த்தும் ஆட்சியைப் பிடித்தும் வருகிறது. எப்போதும்போல், கர்நாடகாவைத் தவிர்த்து இந்தியாவின் தென் மாநிலங்களில் அந்தக் கட்சி தன்னை வலுப்பெறச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்பெறச் செய்ய பல்வேறு யுத்திகளை அந்தக் கட்சி மேற்கொண்டுவருகிறது. தற்போது பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்துவருகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைவராக பதவியேற்ற அண்ணாமலை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பது, ஆளும் கட்சியின் மீது ட்விட்டரில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது என்று விறுவிறுப்பாக இயங்கிவந்தார். ஆனால், தான் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை வெளியிடாமல் இருந்துவந்த அண்ணாமலையை திமுகவினர் விமர்சித்துவந்தனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை விலக்க தேசிய பாஜக தலைமை திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜக டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இப்ப இருக்கும் அண்ணாமலை, வெறும் வாய்ச்சொல் வீரர் என்று பா.ஜ.க. டெல்லி தலைமை கருதுகிறது. அவரை விரைவில் மாற்றும் முடிவுக்கும் வந்திருக்கு. அதனால், இந்தப் பதவியைக் குறிவைத்து பேராசிரியர் மதுரை சீனிவாசனும், வானதி சீனிவாசனும், இன்னும் சிலரும் விறுவிறுப்பாகக் காய் நகர்த்தறாங்க. இங்குள்ள கட்சியின் சீனியர்களோ, இவர்களில் மதுரை சீனிவாசனைத் தலைவராக்கினால், அவர் தன் நட்புணர்வால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸையும் பா.ஜ.க. கூட்டணிக்கு இலகுவாகக் கொண்டுவருவார் என்றும், அதேபோல் வானதி சீனிவாசனை நியமித்தால், அவர் அ.தி.மு.க.வில் இருக்கும் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் இருக்கும் நட்புணர்வால், அ.தி.மு.க.வை, பா.ஜ.க.வுடனே இருக்கும்படி பார்த்துக்கொள்வார் என்றும் மேலிடத்திற்குப் பரிந்துரைகளும் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கின்றனர்.