“போயும் போயும் இந்தக் கட்சிலயா வேட்பாளரா நிற்கணும்? இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று அந்தத் தென்மாவட்ட தொகுதி வேட்பாளரின் மனைவி திட்டித் தீர்த்திருக்கிறார். காரணம் – விவகாரமான அந்தத் தலைவர், தன் கட்சி வேட்பாளர்களிடம் வில்லங்கமாகச் சொன்ன ஒரு விஷயம்தான்.
அப்படியென்ன சொன்னாராம் அந்தத் தலைவர்?
“நாம போட்டி போடறது ஜெயிக்கிறதுக்காக இல்ல. அந்தக் கட்சி தோற்கிறதுக்காகத்தான். அதனால, தேர்தல்ல அந்த வேலைய மட்டும் பார்த்தால் போதும். தேவையில்லாம, ஓட்டுக்கு பணம் கொடுக்கிற வேலை பார்க்க வேணாம். என்கிட்ட இருந்தும் பணம் எதிர்பார்க்காதீங்க. நான் ஒரு ரூபாகூட தர மாட்டேன்” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.
தலைவரின் இந்த ஓபன் ஸ்டேட்மெண்ட், வேட்பாளர்கள் பலரது வயிற்றில் புளியைக் கரைக்க, நம்மிடம் பேசினார் அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர். “முதுகுளத்தூர் வேட்பாளர் 4 கோடிக்கு மேல செலவழிச்சிட்டாரு. திருமங்கலம் வேட்பாளர் செலவழிச்சது ஒன்றரை கோடி. எங்க தலைவர்கிட்ட பணமா இல்ல? வெற்றி வாய்ப்புள்ள ஒரு பத்து தொகுதிகளுக்கு பத்து கோடி வீதம் கொடுத்தா குறைஞ்சா போயிருவாரு? முன்னால எல்லாம் முதலமைச்சர் வேட்பாளர்ன்னு சொல்லிட்டிருந்தாரு. இப்ப அப்படி சொல்லுறது இல்ல. வேட்பாளர்கள் பாவம்ங்க. என்ன தலைவரே இப்படி சொல்லுறீங்கன்னு கேட்டதுக்கு, நானே ஜெயிக்க மாட்டேன். அப்புறம் நீங்க எப்படி ஜெயிப்பீங்கன்னு நக்கலா சிரிச்சிருக்காரு. ஏற்கனவே, இவரை நம்பி வந்தவங்க எல்லாரும் நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. இப்ப, வேட்பாளர்களுக்கும் அந்த நெலம ஏற்பட்டிருக்கு. சாதிய வச்சு அரசியல் பண்ணி, எங்கள உசுப்பேத்தி, இந்த நிலைமைக்கு கொண்டுவந்துட்டாங்க. எங்களுக்கெல்லாம் பட்டாலும் புத்தி வராதுங்க” என்று நொந்துகொண்டார்.
தேர்ந்த அரசியல் தலைவரல்லவா? உருட்டுவதற்கு பகடைக்காய்களாக தொண்டர்களும், வேட்பாளர்களும் கிடைத்திருக்கிறார்கள்!