மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டில் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் ஆறாயிரம் அளிக்கப்படும் என்றும், இந்த தொகை ரூபாய் இரண்டாயிரம் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளான் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதே நாளில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தைத் தொடக்கிவைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக - பாஜக கூட்டணி உருவானதையடுத்து மத்திய, மாநில அரசிகளின் இந்த உதவித் தொகை பெறுவோரின் பட்டியல் விறுவிறுப்பாக எடுக்கப்படுகிறது. மேலும் பயன்பெறுவோரிடம் இருந்து ஆதார் எண், வங்கி கணக்கு எண் பெறும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, இந்த திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசும், மத்திய அரசும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
-மகி