அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட மாநில மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு’ என்று தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டிற்காக முன்னாள் அமைச்சர்கள், அவரவர்கள் மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாநாடு நடைபெறும் அதே நாளில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார வாகனத்தை இன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயகுமார், “நீட் தேர்வை எதிர்த்து திமுகவினர் 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா?. 20 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தால் அதிமுகவின் மாநாடு நடப்பது வெளியே தெரியாமல் போகிவிடுமா. இதை கூட ஒரு காழ்ப்புணர்ச்சியாக தான் நடத்துகின்றனர். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதிமுகவின் மாநாடு வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அன்றைய தினமே நீட் தேர்வை ரத்து செய்ய திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.