சென்னையிலிருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவிற்கும் கடிதம் எழுதி இருந்தார்.
கடந்த மாதம் 11 ஆம் தேதி எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் மலேசியாவில் உள்ள பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் குறித்தும் மலேசியா மற்றும் பினாங்கு தீவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பினாங்கிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்பு, வர்த்தக உறவு, சுற்றுலா வாய்ப்புகள் போன்றவற்றை குறித்து கூறி இருந்தார். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையே இருக்கும் வணிக உறவுகளை மேம்படுத்தவும் சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சென்னைக்கும் பினாங்கு தீவிற்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.