Published on 27/06/2019 | Edited on 27/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சியை வலுப்படுத்த அதிமுகவின் தலைமை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் கட்சிக்கு சென்றவர்களை இழுக்க அதிமுக தலைமை காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில்பாலாஜி மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகிய இரண்டு பேரும் தினகரன் கட்சியிலிருந்து வந்து விட்டனர். இதில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு ஆயிட்டார். இதனால் மீதமுள்ளவர்களும் தினகரன் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் மீதமுள்ளவர்களை இழுக்க அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு பாஜகவின் அதிகாரத்தையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றி விசாரித்த போது, திமுகவை எதிர்க்க அதிமுக இன்னும் வலுப்பெற வேண்டும். அதற்கு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் எப்படியாவது இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இருக்கிறது. அதிமுகவின் இந்த முயற்சிக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தருவதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் தினகரன் கூடாரம் வெகு விரைவில் காலியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து திமுகவும் தினகரன் கட்சியிலிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளனர்.