நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ஒரு பேரழிவை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகம் அதிவேகமாக போய்க்கொண்டிருக்கிறது. இன்று பிறக்கிற ஒரு குழந்தைக்கு இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்த பூமியில் வாழ இடம் இருக்காது. இல்லையென்றால் அந்த குழந்தை வாழுகிற இடமாக இந்த பூமி இருக்காது என்பார் நம்மாழ்வார்.
உலகத்திலேயே அதிகமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்கிற நாடு இந்தியா. இந்தியாவிலேயே அதிகமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்வது தமிழ்நாடு. நீர் என்றைக்கு ஒரு விற்பனை பொருளாக வந்துவிட்டதோ அன்றைக்கே கதை முடிந்துவிட்டது. ஒருவர் எனக்கு ஒரு பதிவை அனுப்பியிருந்தார். பேங்க்கில் பணம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. டேங்க்கில் தண்ணீர் வைத்திருப்பவன்தான் பணக்காரன் என்று அனுப்பியிருந்தார்.
ஆயிரம் அடிக்கு கீழே போனாலும் தண்ணீர் இல்லை என்றால், வருங்கால தலைமுறைக்கு என்ன வைத்துவிட்டு போகப்போகிறோம். ஆற்று மணலை அள்ளி விற்றாகிவிட்டது. உடலில் தோளை செதுக்கி எடுத்துவிட்டால் காற்றில் பரவி வரும் நோய் கிருமிகளின் தொற்று உடலில் பரவி இறக்க நேரிடும். அதுபோல ஆற்று மணலை நீங்கள் அள்ளிவிட்டால் ஆறு மரணித்துப்போகும். செத்துப்போகும். ஆறு செத்துப்போகுமா சீமான்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு சான்று ஆற்றோரம் உள்ள பனை, தென்னை, பாக்கு மரங்கள் சாவதுதான்.
உலகத்தின் தலைசிறந்த நீர் தேக்கி ஆற்று மணல். உலகத்தின் தலைசிறந்த வடிகட்டி மணல். அந்த மணலை அள்ளி விற்றுவிட்டார்கள். ஆந்திராவில் தற்போது முதல் அமைச்சராக வந்திருக்கிற ஜெகன்மோகன் ரெட்டி, ஆற்று மணலை அள்ள தடை போடுகிறார். ஆனால் கரூரில் அண்மையில் வெற்றி பெற்ற எம்எல்ஏ செந்தில் பாலாஜியும், எம்பி ஜோதிமணியும் மாவட்ட ஆட்சியரிடத்தில் ஆற்று மணலை அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள்.
மணலை உங்களால் உருவாக்க முடியுமா? மலையை உங்களால் உருவாக்க முடியுமா? ஏரி, கம்மாய், குளம், குட்டை, கிணறு என நாம் வெட்டினோம். ஆனால் ஆறை நாம் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெரும் கொடை. மலைகளில் இருந்து வரும் அருவி தானாக பாதை கண்டு ஓடியது. அதுதான் ஆறு.
ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். ஆனால் 28 மரங்கள்தான் இருக்கிறது. கனடா நாட்டில் ஒரு மனிதனுக்கு 10 ஆயிரம் மரங்களை அந்த நாடு வைத்திருக்கிறது. ஒரு கார் வெளியிடும் நச்சு காற்றை கட்டுப்படுத்த 6 மரங்கள் தேவை என்கிறார்கள். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நடந்து போக முடியவில்லை. சுவாசிக்க முடியவில்லை. அந்த அரசு சொல்லுகிறது. பழைய காரை ஓட்டாதீர்கள். நிறைய நேரம் காரை ஓட்டாதீர்கள் என்று சொல்லுகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து என்ன நிலைமை வரும். இவ்வாறு பேசினார்.