சிஏஜி அறிக்கை விவகாரம் தொடர்பாக நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, சிஏஜி அறிக்கையில் அவர்கள் சில நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் தங்களது அபிப்ராயத்தை சொல்லுவார்கள். அது அவர்களது ஆலோசனைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் சிஏஜி அறிக்கை என்பது அரசின் நடவடிக்கைகளை குறித்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்து சட்டசபையில் தாக்கல் செய்து வெளியிடுவோம். அப்போது அவர்கள் தங்களுடைய அபிப்ராயத்தை சொல்லுவார்கள். சில விஷயங்களை இப்படிச் செய்ததால் என்ன நிலை? இதை எவ்வாறு செய்திருக்கலாம் என்பன போன்ற அவர்களது கருத்துக்களை சொல்லுவார்கள். இது ஊழல் அல்ல. இந்த முறைகளைக் கையாண்டு இருந்தால் அரசுக்கு சேமிப்பு வரும் என்று சொல்லுவார்கள்.
கலைஞர் ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி கொடுக்கப்பட்டது. 2011ல் நான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தேன். 5 முறை கொள்முதல் செய்ததில் ஒவ்வொரு முறையும் கலைஞர் அனைத்து கட்சி சட்டமன்றக் குழுவையும் போட்டிருந்தார். 5 முறையும் அவர்கள் கொள்முதல் செய்தது முதலாண்டுக்கும் அடுத்தாண்டும் வேறுபடும். மூன்றாவது ஆண்டில் குறைவாக இருந்தால் முதலாவது ஆண்டில் அதிகமாக இருக்கும். இறுதி ஆண்டில் அவசர அவசரமாக கொள்முதல் செய்து கப்பலிலேயே 10 ஆயிரம் கலர் டிவி இருந்தது. குடோனில் 50 ஆயிரம் கலர் டிவி இருந்தது.
அந்தந்த மாவட்டங்களில் 1000, 2000 என கலர் டிவிக்கள் இருந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதை வழங்க முடியாமல் இருந்தது. அதன் பின் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதியோர் இல்லங்கள் அங்கன்வாடி மையங்கள் அரசு அலுவலகங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கு அந்த கலர் டிவியை கொடுத்தார்கள். ஆட்சி மாற்றத்தில் நாங்கள் கொள்முதல் செய்த பொருட்கள் மக்களிடம் சேர்ப்பதற்கு கொரோனா காலத்தில் மிகப்பெரிய இடைவேளை ஏற்பட்டது.
மிக்ஸி கிரைண்டர் வழங்கும் திட்டத்தில் 2 கோடியே 18 லட்சம் பேருக்கு கொடுத்தோம். 2016லும் அதிமுக ஆட்சிக்கு வந்ததால் எந்த குறைபாடும் இல்லாமல் கொண்டு சேர்த்துள்ளோம்” எனக் கூறினார்.