நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே 2 ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (06.03.2024) மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளைத் தற்போதும் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (08.03.2024) மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் எங்களுடைய உரிமைகளைக் கேட்க வேண்டியது எங்களது கடமை. தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க.வுக்கும் நிச்சயமாக ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எங்களது உரிமையை நாங்கள் கேட்போம். கேட்டிருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.