சுடச்சுட என்பார்களே அதுபோல திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை மிக வேகமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தது. அதில் ஒன்றுதான் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம். தற்போது வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தப்பட்டு 1000 யூனிட்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதில் இந்த இலவச மின்சார அறிவிப்பும் தொடர்ந்து அமல்படுத்தும் பணி நடந்து வந்தது. இதற்கிடையே தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. இதனால் விசைத்தறிகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சார அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கு மிக முக்கியமான காரணம் அதிமுக தரப்பில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக திமுக அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டதுதான்.
அரசின் அறிவிப்பாணையை நிறுத்தக் கோரி அந்த கடிதம் எழுதியவர் அதிமுக எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விசைத்தறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி உண்மை நிலையை புரிய வைத்தார். விசைத்தறிகளுக்கு உறுதியாக தேர்தல் முடிந்ததும் கூடுதல் இலவச மின்சார அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையை கொடுத்தார். அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி பொறுப்பில் இருந்த வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்குப் பதிவில் திமுக கூட்டணி மிக அதிகமான வாக்குகளை பெற்றது. அம்மக்கள் அமைச்சரின் உத்தரவை ஏற்று, அங்கு விசைத்தறி நெசவாளர்கள் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை செலுத்தினார்கள். இந்த நிலையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்று மூன்றாம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு முதல்வரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது இத்துடன் நிற்காமல் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வரிடம் இந்த கோரிக்கையை அவர் பார்வைக்கு கொண்டு செல்ல, மூன்றாம் தேதி மாலையே விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதோடு, விசைத்தறிகளுக்கு 1000 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 காசுகள் மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக 1001 யூனிட்டிலிருந்து 1500 யூனிட்டுகள் வரை அதிமுக எடப்பாடி அரசு உயர்த்திய அந்த மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் குறைத்து, அதேபோல் 1500 யூனிட்டிற்கு மேல் 70 காசுகள் குறைத்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையின் கீழ் வரும் அந்த அறிவிப்பை மிக வேகமாக உடனடியாக செயல்படுத்தியிருக்கிறார். இது தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் விசைத்தறியாளர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. துறை அமைச்சருக்கும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து பாராட்டுகிறார்கள் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் அமைப்புகள்.