திருப்பத்தூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராகதேவேந்திரன் என்பவர் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக வாணியம்பாடியில் தேவேந்திரன் இன்று (07.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘கடந்த 2017ஆம் ஆண்டிருந்து நாம் தமிழர் கட்சியில் பணியாற்றினேன். தேர்தலின் போது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பட்டு வருகிறார். இதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்தார். அப்போது திடீரென அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதாவது நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரன் தரப்பை நோக்கி, “சீமானுக்கு எதிராகச் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினால் தேடிச் சென்று அடிப்போம்” என எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனையடுத்து தேவேந்திரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.