ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவான ஈவிகேஎஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் 33 வார்டுகள் இருக்கின்றன. 33 வார்டுகளிலும் மக்கள் அதிகமான கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். முடிந்தவரை அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து முடித்த பின் மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் ஈரோடு தெற்கு தொகுதி காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் சில உடல் நலக்குறைபாடுகளை சொன்னார். அவருக்கும் இந்த தொகுதிக்கும் சம்பந்தம் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் மேலிடம் வேட்பாளரை அறிவித்த பின் அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் ஒத்துழைத்தார்கள். மேற்கு தொகுதியில் இருந்தும் காங்கிரஸார் வந்து வேலை செய்தனர். தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அதைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் வராமல் இருந்ததால் ஒன்று இரண்டு வாக்குகள் சிதறாமல் விழுந்தன. மக்கள் ராஜன் போர்க்கொடி தூக்கியதாக சொல்கிறீர்கள். சத்தியமூர்த்தி பவனில் அழுதார். வயிற்று வலியின் காரணமாக அழுதார் என சொன்னார்கள். அவர் விரைவில் குணமடைய வேண்டும். விரைவில் மருத்துவரிடம் காட்ட சொல்லுங்கள். மருத்துவருக்கு பரிந்துரைக் கடிதம் கூட கொடுக்கின்றேன். கண்ணில் கோளாறு இருக்கிறது. நடிகர்கள் கிளிசரின் போட்டால் தான் அழுகை வரும். ஆனால் கிளிசரின் போடாமலேயே சிலரால் அழுக முடிகிறது.
முதலில் வாங்கிய செக்குகளுக்கு எல்லாம் பணம் கொடுக்க சொல்லுங்கள். ஊரில் ஏமாற்றிவிட்டு பணம் கொடுக்க முடியாமல் இருக்கிறார். ஊரில் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிக்கொண்டு இருப்பவர்களில் சிலர் காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறார்கள். இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யார் யாரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றினார் என சொல்ல வேண்டுமா? காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் சீட் கேட்க உரிமை உள்ளது. சம்பந்தம் இல்லாமல் கன்னியாகுமரியில் இருந்து வந்தும் வேறு தொகுதியில் இருந்து வந்தும் சீட் கேட்கின்றனர். கேட்டால் நான் தான் மாவட்டத்தில் பெரிய ஆள் என்கிறார். அவருக்கு கொடுத்த தொகுதியிலேயே ஒழுங்காக வேலை செய்யவில்லை” எனக் கூறினார்.