பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த 07/11/2022 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 08/11/2022 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்' என்று ஒரு அதிபுத்திசாலி சொல்வது போல பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக சட்டமன்ற அனைத்துக் கட்சிகளையும் இன்றைய முதல்வர் துணைக்கு அழைக்கிறார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சிக் குலாவிய போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, நீட் மற்றும் 10% பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ‘பூம் பூம்’ மாடு போல் தலையாட்டிவிட்டு இன்றைக்கு ஏதோ வறியவர்களைக் காக்க அவதாரம் எடுத்தது போல் வித்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார் இந்த முதலமைச்சர். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2006 ஆம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணியிலான மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரை அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ் திமுக மத்தியக் கூட்டணி அரசுதான். அப்போது திமுக சார்பில் பதவியிலிருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.
இந்தச் சட்டத்தைத்தான் தற்போதைய பிஜேபி அரசு 2019 பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை தற்போது பிஜேபி தேவை இல்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல் நடிக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.