Skip to main content

“காவி இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அதற்கு மரியாதை” - செல்லூர் ராஜு

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

"If there is saffron, it is respected" Sellur Raju

 

மதுரை மாநகர் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள எம்ஜிஆர் சிலை கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் சிலை அருகிலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர், ஜெ. பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் இங்கு ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இந்நிலையில், எம்ஜிஆரின் முழு உருவச் சிலையில் இரு தினங்கள் முன்பு (20/12/22) மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் எம்ஜிஆர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டை அகற்றினர். இதனையடுத்து காவி துண்டை அணிவித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திருவள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவி சாயம், காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மதுரையில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போடப்பட்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போட்டுள்ளார்கள். யாரோ ஒரு சமூகவிரோதி இம்மாதிரியான தீயச் செயலை செய்துள்ளார். எம்ஜிஆர் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். குடிசை வீடுகளுக்கு எல்லாம் மின்சாரம் கொடுத்தவர் அவர். 

 

காவி இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அது தான் மரியாதை. குங்குமத்தை நெற்றியில் வைத்தால் தான் அழகு. அதை கீழே போட்டு காலால் மிதித்தால் அதற்கு மரியாதையா? காவி துண்டை எம்ஜிஆர் மீது ஏன் போட வேண்டும். அவர் எல்லா ஜாதியையும் எல்லா மதத்தையும் ஒரே மாதிரியாக பாவித்தவர்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்