Skip to main content

''அப்படி நடந்தால் இந்தியா இந்தியாவாக இருக்காது...''-திமுக பொதுக்குழுவில் ஆ.ராசா பேச்சு   

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

"If that happens, India will not be India..." - A. Raza's speech at the DMK General Assembly

 

சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார். கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

 

பொதுக்குழு மேடையில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், ''அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள் 'எப்போதாவது அங்கே மதத்தின் பெயரால் அரசியல் செய்து கொண்டிருக்கின்ற ஜனசங்கம் (அப்போது பிஜேபி இல்லை, ஆர்எஸ்எஸ் இல்லை ஜன சங்கம்தான் இருந்தது) தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருமா' என்று கேட்ட பொழுது, 'ஒரு காலமும் அது நடக்காது; அப்படி நடந்தால் இந்தியா இந்தியாவாக இருக்காது' என்று 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அண்ணா சொன்னார். அவர் இன்றைக்கு இல்லை. அவர் இருக்கின்ற வரை ஆர்.எஸ்.எஸ் அபாயம், பிஜேபி அபாயம் இல்லை. அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். கொள்கை ரீதியாக பிஜேபி எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். சேர்த்தும் கொண்டார். அப்பொழுது சிறுபான்மை மக்களுக்கு ஒரு பெரிய அச்சம் இருந்தது. ஆனால் கலைஞருடைய சாதுரியம், ராஜதந்திரம், கூட்டணி வைத்தும் குறைந்தபட்ச செயல்திட்டம் கொண்டு வர எழுதி கொடுத்தார். அதை தனது கரங்களால் எழுதியவர் முரசொலி மாறன். அதை நேரடியாக நான் பார்த்தேன். நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை எடுக்கக் கூடாது, நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயிலை அயோத்தியில் கட்டக் கூடாது, நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது. இதுதான் ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு ஜீவாதார கொள்கை என அண்ணா எதிர்த்தார். ஆனால் கலைஞர் உடன்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலை வந்தபோதும் கூட பிஜேபியின் கையை கட்டிப் போட்ட பெருமை கலைஞருக்கு உண்டு.

 

DMK

 

இன்றைக்கு அண்ணா இல்லை, கலைஞர் இல்லை. இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு இந்த திராவிட மாடலுக்கு ஏன் மோடி பயப்படுகிறார்? ஏன் அமித்ஷா பயப்படுகிறார்? ஏன் வடநாடு பயப்படுகிறது?. கலைஞர் சொல்வார் 'அமெரிக்கா என்ற மதம் பிடித்த யானையை அடக்குகின்ற அங்குசம் தான் கியூபா. அங்குசம் தான் பிடல் காஸ்ட்ரோ' என்று சொல்வார். அந்த அங்குசம் அமெரிக்காவில் கடன் வாங்கவில்லை. இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறது. தனித்த நாடாக எல்லா செல்வமும் பெற்ற நாடாக இருக்கிறது. பிடல் காஸ்ட்ரோ 50 ஆண்டு காலம் அந்த நாட்டின் அதிபர். 2008 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு எப்படியாவது அந்த நாட்டை கபளீகரம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விரும்பிய போது பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் பதவியேற்று கொண்டார். 'உங்களோடு ஒத்துப்போக, வர்த்தகம் செய்ய டிரம்ப் விரும்புகிறாரே' என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் 'நான் உங்களோடு வருவதாக இருந்தால் எங்களுக்குள்ள மரியாதை, எங்களுக்குள்ள அமைதி, சமரச நட்பு, இரண்டு நாடுகளுக்கும் நன்மை. இதை தருவதாக இருந்தால் உங்களோடு வருவதற்கு ஒத்துக்கொள்கிறோம்' என்றதோடு, அடுத்த வார்த்தை சொன்னார் 'கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எங்கள் புரட்சிக்கு மூப்பில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று சொன்னார்.

 

இன்று இந்திய துணைக் கண்டத்திற்கு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. பிடல் காஸ்ட்ரோ இல்லை என்று டிரம்ப் எப்படி அன்றைக்கு கணித்தாரோ அதுபோல மோடி மற்றும் பிஜேபி இன்று கணித்துக் கொண்டிருக்கிறார்கள் கலைஞர் இல்லை என்று. நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் உங்களோடு கூட்டணி வைத்திருக்கின்றோம் கடந்த காலத்தில். இப்பொழுது கூட மத்திய அரசாங்கத்திடம் உடன்படுகிறோம் என்று சொல்லிவிட்டு சொன்னீர்கள், எங்கள் மொழி, இனம், அடையாளத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று. இதுதான் திராவிட ஆட்சி என்று சொன்னீர்கள். நான் உங்களை எப்படி பார்க்கிறேன் என்றால் பிடல் காஸ்ட்ரோ மறைந்ததற்கு பிறகு வாலாட்ட நினைத்த அமெரிக்காவின் தலையை எப்படி ஒட்ட நறுக்கினாரோ பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் அதுபோல கலைஞருக்கு பின்னால் பிஜேபினுடைய வாலை, மதவாதத்தை ஒட்ட நறுக்குகின்ற ஒரே மகத்தான தலைவராக இந்திய துணை கண்டத்திற்கு நீங்கள் தான் இருக்கிறீர்கள். வாருங்கள் வழி நடத்துங்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்